அமைச்சர் பொன்முடி வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்றபோது சேற்றை வீசிய விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த பெண் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல பகுதிகளில் பெரும் சேதமும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. விழுப்புடம் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுற்று வட்டார கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.
ஆனால் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், நிவாரண உதவிகள் வழங்க அதிகாரிகள் வரவில்லை என்றும் இருவேல்பட்டு சுற்றுவட்டார மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் அப்பகுதிக்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மக்கள் தங்கள் குறைகளை அமைச்சரிடம் கூறி வந்த நிலையில், ஆத்திரம் அடைந்த சிலர் சேற்றை வாரி அமைச்சர் மீதும் கலெக்டர் மீதும் வீசியதால் பரபரப்பு எழுந்தது. உடனடியாக காவலர்கள் அமைச்சரை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை என அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் சேற்றை வீசிய விவகாரத்தில் பாஜக பெண் பிரமுகர் விஜயராணி மற்றும் ராமகிருஷ்ணன் என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Edit by Prasanth.K