வந்தே பாரத் ரயில் கதவுகள் திறக்கவில்லையா? பயணிகள் இறங்க முடியாமல் தவிப்பு..!
சென்னையில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்ற போது, ரயில் கதவுகள் திறக்காததால் பயணிகள் இறங்க முடியாமல் தவித்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில், இந்த ரயில்கள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றன. குறிப்பாக, சென்னையில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு பெரும் பயனாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று சென்னையில் இருந்து நெல்லை சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல் வந்தபோது, இரண்டு பெட்டிகளின் கதவுகள் திடீரென திறக்கவில்லை. இதனால், பயணிகள் இறங்க முடியாமல் தவித்ததாக கூறப்படுகிறது.
பயணிகள் இறங்காமலேயே ரயில் புறப்பட்டதால், அவசர கால பட்டனை பயணிகள் அழுத்தியதாகவும், அதன் பிறகு பயணச்சீட்டு பரிசோதகர் வந்து விசாரணை செய்த போது, ரயில் கதவுகள் திறக்கவில்லை என்று பயணிகள் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் பின்னர் கொடைரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் இறக்கி விடப்பட்டதாகவும் அங்கு உள்ள நிலைய அதிகாரிகள் மைசூர் ரயிலில் மீண்டும் திண்டுக்கல்லுக்கு அந்த பயணிகளை அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
வந்தே பாரத் ரயிலின் இரண்டு பெட்டிகளின் கதவுகள் மட்டும் ஏன் திறக்கவில்லை என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva