1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 மார்ச் 2024 (07:51 IST)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய அறிவிப்பு..!

traffic
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க இருப்பதை அடுத்து சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நாளை தொடங்குகிறது என்பதும் முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளதை அடுத்து நாளை மற்றும் மார்ச் 26 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வெளியான அறிவிப்பின்படி பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது. பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பஸ்கள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. நேராக ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

அதேபோல் ரத்னா கபே சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் பாரதிசாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக வரும் வாகனங்கள் கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.

மேலும் எம், டி, வி ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம். வாலாஜா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலைக்கு செல்வதற்கு அனுமதி இல்லை.

பி, ஆர் ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக தங்கள் வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம். காமராஜர் சாலை:- காமராஜர் சாலையில் இருந்து வரும் எம், டி, வி ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.

காமராஜர் சாலையில் இருந்து வரும் பி, ஆர் ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதிசாலை, பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று தங்கள் வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம். உழைப்பாளர் சிலையிலிருந்து வாகனங்கள் வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை.

Edited by Siva