ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (13:37 IST)

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.! புதிய தலைவர் எஸ்.கே.பிரபாகர் உறுதி.!!

SK Prabakar
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்தி முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதன் புதிய தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.  
 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 27-ஆவது தலைவராக எஸ்.கே பிரபாகர் இன்று பதவி ஏற்று கொண்டார். பதவியேற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தலைவர் என்ற முறையில் அரசு பணித் தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார். 
 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் மட்டும் அல்லாமல் பிற தேர்வுகளையும் மாணவர்கள் எழுதி வருகின்றனர் என்றும் இரு தேர்வு தேதிகளும் ஒரே நாளில் இல்லாதவாறு ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் அவர் கூறினார். தமிழ்நாடு அரசு பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவர்களின் கனவுகள் நிறைவேறும் வகையில் அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம் என்று அவர் தெரிவித்தார்
 
போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களுக்குத் தேர்வு முடிவுகள் விரைவில் வந்தால் தான், அந்த பணியில் சேர்வதா? அல்லது வேறு முயற்சி எடுப்பதா? என்பதை முடிவு எடுக்க முடியும் என்றும் தேர்வு எழுதிய பின்னர் தேர்வு முடிவுகள் வெளியாகும் காலத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்க நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்றும் எஸ்.கே.பிரபாகர் குறிப்பிட்டார். மேலும் தேர்வுகள் குறிப்பிட்ட கால அட்டவணையில் நடப்பதற்கும், விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பெரிய புகார்கள் எதுவும் இல்லாமல் தரமான முறையில் தேர்வுகளை நடத்தி வருகிறது என்றும் இதனை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.  மேலும் குறைகளைக் களையவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.