பஸ் விட்டா போதுமா, பப்ளிக் வர வேண்டாமா? போக்குவரத்து கழகம் குமுறல்!
100 சதவீத பயணிகள் பயணிக்கலாம் என அறிவித்த போதும் மக்கள் பயணத்திற்கு வருவதில்லை என போக்குவரத்து கழகம் வேதனை.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பேருந்து உள்பட அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு இருந்தன. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
அதன்படி பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் பயணிக்கலாம் என்று சமீபத்தில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% பயணிகள் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
மேலும் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை அதிகரித்துக்கொள்ளவும் போக்குவரத்து கழகத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் பேருந்து இயக்கமும் அதிகரிக்கப்பட்டது. ஆனால், பேருந்தில் மக்கள் கூட்டம் தான் இல்லை.
இரவு 9 மணிக்கு மேல் இயக்கப்படும் பேருந்துகளில் மக்கள் வருவதில்லை எனவும் இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.