சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைத்தால் கிரிமினல் வழக்கு.. தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் வைத்தால் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை சாலை நடுவில் வைக்கப்பட்ட விளம்பர பலகை விழுந்து இளம் பெண் பலியான விவகாரம், விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடி கம்பம் அமைத்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் ஆகியவைகளை சுட்டிக்காட்டி, விதிகளை மீறி விளம்பர பலகைகள் வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவர்களுக்கு எதிரான குற்ற வழக்கு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் அரசு ஆஜரான வழக்கறிஞர் சட்டத்துக்கு புறம்பாக தமிழ்நாட்டில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் வைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
Edited by Siva