செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 5 ஜூலை 2020 (12:41 IST)

தலைவலியாக மாறிய ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்! – நிரந்தரமாக தடை செய்ய ஆலோசனை!

தமிழகம் முழுவதும் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு செயல்பட 2 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக அந்த அமைப்பை கலைப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாத்தான்குளம் கொலை வழக்கில் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தமிழகம் முழுவதும் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரை காவல் பணிகளில் ஈடுபடுத்த 2 மாத காலத்திற்கு தடை விதிக்க அனைத்து மாவட்ட காவல்நிலையங்களுக்கும் வாய்வழி உத்தரவு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் பல இடங்களில் அத்துமீறியதாக சமூக வலைதளங்களில் பலர் தெரிவித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முன்னாள் காவல் அதிகாரிகள் பலரே இந்த ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு தேவையற்றது என கூறியிருந்த தகவல்களும் தற்போது வெளியாக தொடங்கியுள்ளது.

முன்னாள் டிஜிபி ராமனுஜன் அப்போதே இந்த அமைப்பை கலைக்க முடிவெடுத்ததும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ராதாகிருஷ்னன் இது தேவையற்ற அமைப்பு என கூறியிருந்ததும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த கருத்துகளை முன் வைத்து ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை கலைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாய் தகவல்கள் வெளியாகியுள்ளன.