அக்டோபரில் இருக்கு கூத்து; எச்சரிக்கை விடுக்கும் சண்முகம்!
தமிழகத்தில் இம்முறை அதிக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் கொரோனா பரவலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் இம்முறை அதிக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் கொரோனா பரவலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே, தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்...
கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் இன்னும் முக்கிய கட்டத்தில் தான் இருக்கிறோம். எனவே பாதுகாப்பு நடவடிக்கைகளை விட்டுவிட்டு மன நிறைவு அடைய வேண்டாம். பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
கொரோனா மேலாண்மையில் மிக மோசமான காலக்கட்டம் இனி தான் வர உள்ளது. போக்குவரத்து, வர்த்தக நடவடிக்கைகள், தொழிற்சாலைகளை திறந்துவிட்டிருப்பதால் வரும் அக்டோபர் மாதத்தில் கொரோனா தொற்று மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.