மாற்று இடத்தில் புத்தக வெளியீடு நடக்கும்.. டி.எம்.கிருஷ்ணா உறுதி
டி.எம்.கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டு விழா நடத்துவதற்கான அனுமதியை கலாக்ஷேத்ரா ரத்து செய்துள்ள நிலையில், “திட்டமிட்டப்படி மாற்று இடத்தில் புத்தக வெளியீட்டு விழா நடத்தப்படும்” என டி.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணா, சமூகம் சார்ந்து பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். உதாரணத்திற்கு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துக்கொண்டதை கூறலாம். மேலும் கர்நாடக இசை சங்கீதம் அனைத்து மக்களிடமும் சென்று சேர வேண்டும் என்ற முயற்சியில் உள்ளார்.
இந்நிலையில் டி.எம்.கிருஷ்ணா எழுதிய Sebastian and sons என்ற புத்தகம் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் வெளியிட, கலாக்ஷேத்ரா அரங்கில் புத்தக வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அப்புத்தகத்தின் கருத்துகள் சில சர்ச்சைக்குரியவையாக உள்ளதாக, புத்தக வெளியீட்டு விழாவிற்கு எற்கனவே வழங்கிய அனுமதியை ரத்து செய்துள்ளது கலாக்ஷேத்ரா நிர்வாகம். இது குறித்து அந்நிர்வாகம், “சமூக விரோதத்தை தூண்டுவது போல் உள்ள எந்த செயலுக்கும் அனுமதி இல்லை” என கடிதம் எழுதியுள்ளது.
எனினும், “திட்டமிட்டப்படி பிப்ரவரி 2 ஆம் தேதி கலாக்ஷேத்ராவுக்கு பதில் மாற்று இடத்தில் sebestian and sons புத்தக வெளியீடு நடக்கும்” என டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் மிருதங்கம் தயாரிப்பு தொழிலாளர்களின் சிரமத்தை புத்தகத்தில் கூறுயுள்ளதாக டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.