திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2017 (12:55 IST)

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது 3 கொலை வழக்குகள் உள்ளது!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது 3 கொலை வழக்குகள் உள்ளது!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.


 
 
கடந்த சனிக்கிழமை சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் திமுக உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை வைத்தனர். ஆனால் சபாநாயகர் அதனை மறுத்துவிட்டார். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
 
இதனையடுத்து சட்டசபை காவலர்கள் மூலம் திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதில் திமுகவினர் கடுமையாக தாக்கப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் அன்றைய தினம் சட்டசபை நடந்த விதத்தை கண்டித்து திமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
 
இந்த உண்ணாவிரத போராட்டம் தமிழகம் முழுவதும் திமுக முக்கிய தலைவர்கள் முன்னிலையில் நடந்து வருகிறது. சென்னை வள்ளலார் நகரில் நடைபெற்று வரும் திமுகவின் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டார்.
 
இதில் கலந்து கொண்டு பேசிய அவர், மக்களை ஏமாற்றி சொத்து சேர்த்ததால் சிறைக்கு போனவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதிக குற்றம் செய்தவருக்கே அதிமுகவில் பதவி பெறுவதற்கு தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.