Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2016 (15:23 IST)
காங்கிரஸ் கோஷ்டி மோதல் ஆரம்பம்!
மனநிலை பாதிக்கப்பட்ட இளங்கோவன்: காங்கிரஸ் கோஷ்டி மோதல் ஆரம்பம்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும் இடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் திமுக பொருளாளரும் சட்டசபை எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் வலியுறுத்தி பேசினர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய காங்கிரஸ் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கையோ, கறுப்பு அறிக்கையோ தேவையில்லை. வெள்ளை அறிக்கை வெளியிடுவதால் ஜெயலலிதா உயிரோடு வரப்போவதில்லை என்றார்.
இதற்கு முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பதிலளித்து பேசுகையில் அது காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல திருநாவுக்கரசரின் தனிப்பட்ட கருத்து என கூறினார். மேலும் இதனை ராஜீவ்காந்தி கொலை வழக்கோடு தொடர்புபடுத்தி பேசினார்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கபட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டாம் என்று நான் சொன்ன கருத்து அவரோடு பணியாற்றியவன் என்ற துயரத்தில் தான் சொன்னேன்.
ஆனால் அந்த கருத்தை சிலர் ராஜீவ்காந்தி கொலைவழக்கோடு ஒப்பிட்டு பேசி இருப்பது அவர்கள் மனநிலை பாதிக்கபட்டவர்கள் என்பதை காட்டுகிறது. அவர்களின் கருத்து ஜீரணிக்க முடியாயது. அவர்களை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஒருபோதும் மண்ணிக்கமாட்டார்கள் என்றார்.
மேலும் காங்கிரஸ் கட்சியில் கருத்து சொல்லும் உரிமையை கட்சி தலைமை எனக்கு வழங்கியுள்ளது. எனது கருத்து தனிபட்ட கருத்து என்று சொல்பவர்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றார்.