அடுத்து திமுக தான்: தொல்.திருமா அரசியல் ஆருடம்!!
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வரும் 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
அதற்கான முழு அடைப்பு போராட்டம் விளக்கக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், திராவிடர் கழகம் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் சவுந்தரராஜன் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூட்டத்தில் கூறியதாவது, அதிமுக ஆட்சி என்பது மோடியின் கையில் உள்ள கண்ணாடி பாத்திரம். திராவிட கட்சிகளை வேரறுக்க வேண்டும், மதவாதச் சக்திகள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாஜக கங்கணம் கட்டிக் கொண்டு போராடி வருகிறது.
பிரதமர் மோடியால் 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தின் விவசாய பிரதிநிதியை சந்திக்காதது ஏன். அடுத்து மத்திய் அரசு திமுகவுக்கு குறி வைத்து வருகிறது. ஜெயலலிதா மரணத்தால் அதிமுக பலவீனமாக உள்ளது. திமுகவையும் வீழ்த்திவிட்டால் தமிழகத்தில் காலூன்றலாம் என்பது பாஜக திட்டம் என திருமாவளவன் பேசினார்.