ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (15:44 IST)

கமல்ஹாசன் தத்தெடுத்த கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியல்! ஏன் தெரியுமா?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் திருவள்ளூர் அருகே உள்ள அதிகத்தூர் என்ற கிராமத்தை தத்தெடுத்தார். கமல்ஹாசன் இந்த கிராமத்தை தத்தெடுத்ததால் இந்த கிராமத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என அப்பகுதி மக்கள் நம்பினர். ஆனால் இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு குடிநீர் இல்லாததால் உடனடியாக குடிநீர் வழங்கக்கோரி அந்த கிராம மக்கள் சாலை மறியல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கமல்ஹாசன் இந்த கிராமத்தை தத்தெடுத்தது முதல் பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகள் செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. கிராமசபை கூட்டமும் நடத்தி அதில் சாலையை சீரமைத்தல், தெரு விளக்கு பராமரித்தல், குப்பைகளை அகற்றுதல், சீரான குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல் ஆகிய பணிகளை முடிக்க வேண்டும் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் போட்ட தீர்மானம் அப்படியே இருப்பதால் தற்போது இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் கூட கிடைக்கவில்லை.
 
இதனையடுத்து இந்த பகுதி கிராம மக்கள் இணைந்து திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். தான் தத்தெடுத்த கிராமத்தில் மக்கள் வாழ அடிப்படை தேவையான குடிநீரே கிடைக்கவில்லை என்பது கமல்ஹாசனுக்கு தெரியுமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.