1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 10 மே 2024 (11:57 IST)

சவுக்கு சங்கருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை.! போலீசார் கதவை உடைத்ததால் பரபரப்பு..!!

Savaku Shankar
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு சொந்தமான இடங்களில் தேனீ போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தின் கதவை உடைத்து சோதனை மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சென்னை, திருச்சி, சேலம், கோவை என அடுத்தடுத்து சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதியப்பட்டு வரும் நிலையில் தேனி போலீசார் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்திருந்தனர். 
 
இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்த மசேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில்  சென்னை தியாகராய நகர் ராஜா பாதர் தெருவில் உள்ள சவுக்கு மீடியா அலுவலகத்தில் தேனி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.


அறையின் சாவி இல்லாத காரணத்தால் போலீசார், சவுக்கு சங்கர் அலுவலக கதவை உடைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் ஏதேனும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதா என சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.