ஆரோக்கியத்தின் மிக முக்கியமான அம்சம் ஆரோக்கியத்தின் கலாச்சாரத்தை உருவாக்குவது – சத்குரு!
இந்திய இரைப்பை குடல் எண்டோசர்ஜன்கள் சங்கம் (IAGES) என்பது, எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் முன்னேற்றத்தை இந்தியா மற்றும் பிற பகுதிகளிலும் ஊக்குவிக்கவும் பரப்பவும் உருவாக்கப்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்களின் அமைப்பாகும்.
கோவையில் இன்று (11 பிப்ரவரி 2023) நடைபெற்ற அவர்களின் 20-வது ஆண்டு மாநாட்டில் ஈஷா நிறுவனர் சத்குரு அவர்கள் சிறப்புரை ஆற்றினார். 'ஆரோக்கியம் வேண்டும் என்றால், ஒரு குறிப்பிட்ட அளவிலான ஒத்திசைவை உருவாக்க வேண்டும். உடல் ஒருங்கிணைப்பு, உடல் கட்டமைப்பின் ஒருங்கிணைப்பு, உடல் ரசாயனத்தின் ஒருங்கிணைப்பு அல்லது உடலாற்றலின் ஒருங்கிணைப்பு ஆகிய மூன்று விஷயங்கள் நடைபெற்றால், பெரும்பாலான ஆரோக்கியம் நிர்வகிக்கப்பட்டுவிடும்' என்றார்.
மேலும் மனித உடலில் உள்ள ஒத்திசைவு பற்றி விளக்கிய சத்குரு, “உடல் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்வது முக்கியம்" என்று விளக்கினார். "உடல் எங்கிருந்தோ திடீரெனஉருவாகவில்லை. இந்த கிரகத்திலும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலும் நடக்கின்ற மற்ற அனைத்து வாழ்க்கை செயல்முறைகளின் கூட்டு விளைவாகும். இவ்வனைத்து சக்திகளும் ஒரு குறிப்பிட்ட வழியில் இயங்குவதன் விளைவாக நாம் இருக்கிறோம். உண்மையில், நாம் அவை அனைத்தையும் நிர்வகிக்க முடியாது. ஆனால் அவற்றில் சிலவற்றை நாம் நிர்வகித்தாலே நாம் ஆரோக்கியமாக இருப்பது சாத்தியமாகிவிடும்.
உணவு உண்ணும் பழக்கம் பற்றி சத்குரு குறிப்பிடுகையில், "நீங்கள் உட்கொள்ளும் உணவின் கார்போஹைட்ரேட்டில் குறைந்தது 50% அளவிற்கு சிறுதானியங்கள் இருக்கவேண்டும். இது ஒன்றை மட்டும் செய்தாலே, உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும். முதலில் மருத்துவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் ஆரோக்கியத்தின் காட்சியாக இருக்கிறீர்கள். இது மிக மிக முக்கியமானது,” என்ற சத்குரு அனைவரையும் எதிர்வரும் 18-ம் தேதி நடக்கவிருக்கும் மஹாசிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.