ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2024 (10:00 IST)

இரண்டாவது மனைவியை 8 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்! - திருவண்ணாமலையை உலுக்கிய சம்பவம்!

தனது இரண்டாவது மனைவியை கொன்று வீசிவிட்டு நாடகமாடிய கணவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

திருவண்ணாமலை கோபுரத்தெருவை சேர்ந்தவர் கோபி. ஆட்டோ டிரைவரான கோபிக்கு முன்னதாக ஒரு திருமணம் நடந்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அரசுடையான்பட்டு பகுதியை சேர்ந்த சரண்யா என்பவருக்கும் கோபிக்கும் திருமணமாகி ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த சில காலமாகவே கோபிக்கும், சரண்யாவுக்கு கருத்து வேறுபாடுகள் நிலவி வந்துள்ளது. தீபாவளிக்கு முன்னதாக இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் சரண்யாவை கோபி கொலை செய்துள்ளார். பின்னர் சரண்யாவின் உடலை 8 துண்டுகளாக வெட்டி நண்பர் ஒருவரின் உதவியுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி காட்டுப்பகுதியில் வீசியுள்ளார்.
 

 

பின்னர் வீட்டிற்கு வந்து குழந்தைகளிடம், சரண்யா தீபாவளிக்காக அரசுடையான்பட்டில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறியுள்ளார். 4 நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்த கோபி, தாயார் வீட்டிற்கு சென்ற தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

 

ஆனால் போலீஸார் விசாரணையில் சரண்யா அரசுடையான்பட்டுக்கு வரவே இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால் கோபி மீது சந்தேகமடைந்த போலீஸார் அவரை விசாரிக்க சென்றபோது அவர் தப்பி தலைமறைவாகியுள்ளார். கோபியின் தாயார் சிவகாமியிடம் போலீஸார் விசாரித்தபோது சரண்யா கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான கோபியையும் கைது செய்து சூளகிரி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று சரண்யாவின் உடல் பாகங்களை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K