தேசிய கீதம் இசைக்காததற்கு கண்டனம் தெரிவித்து ஆளுனர் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய விவகாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், கூட்டத்தொடரின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ஆனால் தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுனர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளியேறினார். தான் தேசியகீதத்தை ஒலிக்க கோரி உருக்கமாக வேண்டுகோள் விடுத்து அவர்கள் மறுத்துவிட்டனர் என ஆளுனர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திமுக அமைச்சர் துரைமுருகன் “தேசிய கீதம் பாடப்படவில்லை என்ற கருத்தை ஆளுநர் கூறியுள்ளார். தேசியகீதம் குறித்து கடந்த முறையே ஆளுநருக்கு சபாநாயகர் விளக்கம் அளித்தார். தமிழக சட்டப்பேரவையின் மரபின்படி, கூட்டத்தொடர் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் பாடப்படுவதுதான் பின்பற்றப்படுகிறது.
ஆனால் மீண்டும் இதை ஒரு பிரச்சினையாக மாற்றி தனது உரையை வாசிக்காமல் ஆளுனர் வெளியேறியுள்ளார். இதன்மூலம் ஆளுனரின் நோக்கம் கேள்விக்குள்ளாகிறது. தேசிய கீதம் மற்றும் அரசியலமைப்பு மீது தமிழக அரசு எப்போதும் மரியாதை வைத்துள்ளது” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K