1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (13:59 IST)

கலைஞரின் முதல் தொகுதியான குளித்தலை தொகுதியில் எழுந்துள்ள புகார்

kulithalai
குளித்தலை அருகே மேல தாளியாம்பட்டியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக போடப்பட்ட தார்சாலை ஒரு வார காலத்திற்குள் ஏடு, ஏடாக பிரிந்து வந்த அவலத்தால் பொதுமக்கள் வேதனை.
 
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி மேல தாளியாம்பட்டியில் வடக்குத் தெருவிலிருந்து சீகம்பட்டிக்கு செல்வதற்கு அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக மண் சாலையினை பயன்படுத்தி வந்துள்ளனர்.
 
மழைக்காலங்களில் அந்த சாலை மிகவும் சேதம் அடைந்தும், தண்ணீர் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வந்ததால் அப்பகுதி பொதுமக்கள் புதிய தார் சாலை அமைக்க வேண்டுமென சுமார் 20 ஆண்டுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
 
அதனை ஏற்று குளித்தலை திமுக எம்எல்ஏ மாணிக்கம், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 29 லட்சம் மதிப்பில் சுமார் 670 மீட்டர் தூரம் வரை புதிய தார்சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கி  பணிகள் நடைபெற்றன.
 
புதிய தார்ச்சலை அமைக்கும் பணியினை மேற்கொண்ட திமுக ஒப்பந்ததாரர் அண்ணாதுரை, தார் சாலை அமைக்கும் பணியினை காலம் தாழ்த்தி வந்ததோடு தரமற்ற சாலையினை அமைத்துள்ளார்.
 
புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் தார் சாலை தோசை கல்லில் இருந்து பிரித்து எடுப்பது போல் ஏடு, ஏடாக பிரிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
மேலும் இந்த சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் டிராக்டர் போன்ற வாகனங்கள் செல்லும்போது தார் சாலை பெயர்ந்து  பூமிக்குள் அமுக்கியவாறு  பள்ளம் ஏற்ப்படுகிறது.
புதிய தார் சாலை முறையாக  போடாமல் உள்ளதால் ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து பள்ளங்களாகவும் காட்சி அளித்து வருகிறது. 
 
இந்த பணிகளை ஆய்வு செய்ய வேண்டிய கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் உதவி செயற்பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கே வருவதும் இல்லை, ஆய்வு செய்வதும் இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
 
மேலும் சுமார் 670 மீட்டர் தூரம் வரை அமைக்கப்பட வேண்டிய தார் சாலை 420 மீட்டர் தூரம் வரை தான் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
 
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த சாலையை நாங்கள் பல ஆண்டுகளாக நடைபாதைகாகவும் விவசாய பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தி வந்ததாகவும், மழைக்காலங்களில்  மழைநீர் தேங்கி செல்வதற்கு சிரமப்பட்டு வந்த காரணத்தினால் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்ததாகவும், தற்போது குளித்தலை திமுக எம்எல்ஏ மாணிக்கம், எங்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 29 லட்சம் மதிப்பில் 670 மீட்டர் தூரத்திற்கு புதிய தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கி கடந்த 9 மாதத்திற்கு முன்பு பூமி பூஜை செய்து பணிகள் துவங்கப்பட்டதாகவும், ஆனால் ஒப்பந்ததாரர் சாலையை போடுவதற்கு காலம் தாழ்த்தியும், பொதுமக்கள் சீக்கிரம் சாலையை அமைக்க ஒப்பந்ததாரிடம் வலியுறுத்தியதால், ஒரு வாரத்திற்கு முன்பு இரவோடு இரவாக  அவசரக் கதியில் தரமற்ற முறையில் அமைத்துள்ளதால் தற்போது சாலை ஆங்காங்கே பெயர்ந்து ஏடு போல் பெயர்ந்து வருகிறது. எங்களின்  நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சாலை அமைக்கப்பட்ட நிலையில் தற்போது சாலை தரமாக  இல்லாததால் நாங்கள் மன வேதனை அடைந்துள்ளதாகவும்,  மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மீண்டும் தரமற்ற சாலை அகற்றிவிட்டு, புதுப்பித்து தரமான முறையில் புதிதாக சாலை அமைத்து தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.