1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (10:10 IST)

தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும்! - விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேச்சு!

Manikam Tagore MP
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள வி.சொக்கலிங்கபுரம், ஆலமரத்துப்பட்டி, செங்கமலப்பட்டி பகுதிகளில், நடைப்பெற்று வரும் நூறு நாள் வேலை திட்டப் பணிகளை, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


 
அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மாணிக்கம் தாகூர் பேசியது:

விருதுநகர் மாவட்டமே, தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம். குறிப்பாக சிவகாசியை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் பட்டாசு ஆலை தொழிலாளர்களாக இருக்கின்றனர்.

பட்டாசு ஆலைகளில் வேலை இல்லாத நாட்களில், அந்த தொழிலாளர்களுக்கு இந்த நூறு நாள் வேலை திட்டம் சற்று பயன் தருவதாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில், சமூகநீதிக்காக குரல் கொடுத்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் சிலை திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், வி.பி.சிங் சிலையை திறந்து வைத்து பேசினார்.

இந்தியா முழுமைக்கும் சமூகநிதி வேண்டும் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. தமிழ்நாட்டிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். அப்போது தான் சாதி வாரியாக உள்ள மக்களின் எண்ணிக்கையும், அவர்கள் அடைந்துள்ள பலன்கள்,இழந்துள்ள பயன்கள் குறித்து தெரிய வரும்.

எனவே சாதி வாரி கணக்கெடுப்பு அவசியமானது, இதைத் தான் தலைவர் ராகுல்காந்தியும் வலியுறுத்தி வருகிறார். ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வந்தவுடன், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் மாநிலங்களில் இந்த திட்டம் உடனடியாக கொண்டு வரப்படும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் சமூகநீதி என்பது தான் ஒரே குரலாகவும், இந்தியா கூட்டணியின் குரலாகவும் இருக்கும் என்று மாணிக்கம் தாகூர் பேசினார்.