1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (15:55 IST)

மத உணர்வை தூண்டியதாக வழக்கு..!! அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை..!

Annamalai
மத உணர்வை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது,  பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ அமைப்பு தான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.
 
இதையடுத்து இரு மதத்தவர்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டுவதாக அண்ணாமலை மீது சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனு மீதான விசாரணைக்கு நேரில் ஆஜராக அண்ணாமலைக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.  இந்த சம்மனுக்கு எதிராகவும்,  தனது மீதான புகார் மனுவை ரத்து செய்ய வேண்டும் என அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அண்ணாமலை மீதான புகார் மனுவை ரத்து செய்ய மறுத்ததோடு,  மனு மீதான வழக்கை சட்டத்திற்குட்பட்டு சேலம் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது.  
 
supremecourt
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  அந்த மேல்முறையீட்டு மனுவில்,  நீதிமன்ற சம்மனுக்கும் விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
 
இந்த  மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபான்கர் தத்தா,  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். 


மேலும்  சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்ட நீதிபதிகள், அண்ணாமலை பேச்சின் முழு விவரத்தின் மொழிபெயர்ப்பையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.