சனி, 14 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2024 (14:05 IST)

மின்வாரியத்தில் மிகப்பெரிய மோசடி.! மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.! அன்புமணி ஆவேசம்...!

Anbumani
தமிழக மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, மின் கட்டணத்தை உயர்த்தி, மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு உள்ளது' என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
 
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை எழும்பூரில் பா.ம.க சார்பில் அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, கடந்த 23 மாதங்களில் 3 முறை மின்கட்டணத்தை தி.மு.க., அரசு உயர்த்தி உள்ளது என்றும் 33.7% அளவு உயர்ந்து உள்ளது என்றும் தெரிவித்தார். இது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ள அராஜகம் என அவர் விமர்சித்துள்ளார்.
 
மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு உள்ளது என்றும் மின்கட்டணம் மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும் ஆனால், இன்னும் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகின்றனர் என்றும் இது மிகபெரிய மோசடி என்றும் தெரிவித்தார். தமிழகத்தில், லஞ்சம், ஊழல் நிர்வாகத் திறமையற்ற அரசு உள்ளது என்று அன்புமணி குற்றம் சாட்டினார்.
 
தனியார் நிறுவனத்திடம் அதிக கட்டணம் கொடுத்து தமிழக அரசு மின்சாரம் வாங்குவதாகவும், இதன் மூலம் அதிக கமிஷன் பெறுவதாகவும் அவர் கூறினார். கமிஷன் கிடைப்பதால், தமிழக அரசு மின்உற்பத்தி செய்யவில்லை என குற்றச்சாட்டிய அன்புமணி, மின்கட்டண உயர்வால் சிறுகுறு தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் மக்கள்  சாலைகளுக்கு வந்து போராடினால், தான் கட்டணத்தை திரும்ப பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். 

 
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்திருந்தால் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்காது என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார்.