1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2024 (13:49 IST)

முதலாளிகளை பணக்காரர்களாக்கும் மத்திய பட்ஜெட்..! காங்கிரஸ் விமர்சனம்..!!

Supriya
ஒரு சில முதலாளிகளை பணக்காரர்களாக்கும் வகையில் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
 
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் தலைவர் சுப்ரியா ஸ்ரீனேட், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தயாரிப்பதற்கு முன், சில தொழிலதிபர்கள், வங்கியாளர்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகளை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவித்தார்.
 
ஆனால், மூன்று வேளையும் சாப்பிட முடியாத குடும்பங்களை அவர் சந்தித்திருக்கிறாரா?, பணவீக்கத்தால் போராடும் பெண்களை அவர் சந்தித்திருக்கிறாரா?, பயிர்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் போராடும் விவசாயிகளை அவர் சந்தித்திருக்கிறாரா?, வினாத்தாள் கசிவால் துன்புறுத்தப்படும் இளைஞர்களை அவர் சந்தித்திருக்கிறாரா?  உண்மையான இந்தியாவை அவர் சந்தித்திருக்கிறாரா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
 
ஒரு சில முதலாளிகளை பணக்காரர்களாக்கும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது என்று சுப்ரியா ஸ்ரீனேட் விமர்சித்தார். நாட்டில் 48% குடும்பங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்றும் மக்களின் வருமானம் குறைந்து, சேமிப்பின் மூலம் வாழ்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். பட்ஜெட் வருவதற்கு முன், நாட்டின் பொருளாதாரத்தின் நிலை என்ன என்பதை பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார். 


தவறான பொருளாதார நிர்வாகம், பணமதிப்பிழப்பு, அரைகுறையான ஜிஎஸ்டி அமலாக்கம், திறமையற்ற கோவிட் மேலாண்மை போன்ற கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் ரூ.11.5 லட்சம் கோடி இழப்பை சந்தித்தது என்று சுப்ரியா ஸ்ரீனேட் தெரிவித்தார். மேலும் காய்கறி உள்ளிட்ட விலைவாசி உயர்வால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.