1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2024 (20:40 IST)

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு..! ஜூலை 23-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்..!!

edapadi
மின் கட்டண உயர்வை கண்டித்து ஜூலை 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. தற்போது இருப்பதில் இருந்து 4.83 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, 0 முதல் 400 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து 4 ரூபாய் 80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

401 முதல் 500 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் 15 காசுகளிலிருந்து 6 ரூபாய் 45 காசுகளாகவும், 501 முதல் 600 யூனிட் வரையிலான் பயன்பாட்டிற்கு யூனிட் ஒன்றுக்கு 8 ரூபாய் 15 காசுகளிலிருந்து 8 ரூபாய் 55 காசுகளாகவும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 
 
601 முதல் 800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 9 ரூபாய் 20 காசுகளிலிருந்து 9 ரூபாய் 65 காசுகளாகவும், 801 முதல் 1000 யூனிட் வரையிலான பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய் 20 காசுகளிலிருந்து 10 ரூபாய் 70 காசுகளாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு இனி 11 ரூபாய் 80 காசுகள் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மின் கட்டண உயர்வுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

 
இந்நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 23ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் ரேஷனில் பருப்பு, பாமாயில் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.