தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை; அப்பாவுக்கு கோவில்! நெகிழ்ந்து பாராட்டிய கலெக்டர்!
தஞ்சாவூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது அப்பாவிற்காக கோவில் கட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
”அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்.. தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்” என்றுதான் பாடல்களில் கூட உண்டு. ஆனால் தந்தையரின் பாசம் சினிமாக்களில் அதிகம் காட்டப்படாத ஒன்று. பல தந்தைகள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்கின்றனர்.
சமீபமாக காதல் மனைவிக்கு, பெற்றோருக்கு பலரும் சிலைகல் அமைத்த சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்தன. தற்போது தஞ்சாவூரில் தனது தந்தைக்கு கோவில் எழுப்பியுள்ளார் பாசமிகு மகன் ஒருவர்.
தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் பகுதியை சேர்ந்தவர் தார்சியூஸ். இவரை இவரது தந்தை பல்வேறு இன்னல்களுக்கு நடுவே படிக்க வைத்து ஆளாக்கியதுடன், அன்பாகவும் இருந்து வந்துள்ளார். அவர் சமீபத்தில் மறைந்த நிலையில் அவர் நினைவை போற்றும் விதமாக தனது தோட்டத்திலேயே தந்தையாருக்கு சிலை அமைத்து கோவில் கட்டியுள்ளார் தார்சியூஸ்.
தார்சியூஸ் கட்டிய கோவிலை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், அவரது தந்தை பாசத்தை நெகிழ்ந்து பாராட்டியுள்ளார். இந்த சம்பவம் சுற்று வட்டார பகுதிகளில் வைரலான நிலையில் பலரும் அந்த கோவிலை காண வந்த வண்ணம் உள்ளனர்.
Edit by Prasanth.K