சசிகலா வீட்டை இடிக்க அதிகாரிகள் நோட்டீஸ்!
தஞ்சாவூரில் உள்ள சசிகலாவின் வீட்டை இடிக்க உத்தரவிட்டு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கு அவரது சொந்த ஊரான தஞ்சாவூரில் 10 ஆயிரம் சதுர அடியில் வீடு உள்ளது. தற்போது சசிகலா குடும்பத்தினர் யாரும் அங்கு தங்கியிராத சூழலில் மனோகரன் என்பவர் அந்த வீட்டை பராமரித்து வருகிறார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னாள் மாநகராட்சியிலிருந்து, அந்த வீடு மிகவும் சிதிலமடைந்திருப்பதாகவும், ஏதாவது அசம்பாவிதம் நிகழும் முன் அதை இடிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனாலும் இன்னமும் வீட்டை அவர்கள் இடிக்கவில்லை.
இதனால் நேரடியாக அந்த வீட்டுக்கே சென்ற மாநகராட்சி அதிகாரிகள் வீட்டை இடிக்காதது குறித்து மனோகரனிடம் விசாரித்துள்ளனர். நோட்டீஸ் குறித்த தகவலை சசிகலா குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளதாக கூறிய அவர், தான் அந்த வீட்டில் வசிக்கவில்லை என்றும் பின்பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். விரைவில் இடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்திய அதிகாரிகள் வீட்டின் முன் நோட்டீஸை ஒட்டியுள்ளனர்.