வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (21:32 IST)

சசிகலா கேரக்டரில் நடிக்க பிரபல நடிகை ஒப்பந்தம்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் ஏஎல் விஜய், இயக்குனர் கௌதம் மேனன் உள்பட ஒரு சிலர் ஒரே நேரத்தில் உருவாக்கி வருகிறார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கி வரும் ’தலைவி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத் இதற்காக சிறப்பு பயிற்சிகள் எடுத்து மிகுந்த ஈடுபாட்டுடன் இந்த படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் எம்ஜிஆர் கேரக்டரில் நடிக்கும் நடிகர் அரவிந்தசாமி வேறு எந்த திரைப்படங்களிலும் ஒப்புக்கொள்ளாமல் இந்த படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார் 
 
இந்த நிலையில் இந்த படத்தில் சசிகலா கேரக்டரில் நடிக்க ஒரு சில முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த இயக்குனர் விஜய் கடைசியாக பிரியாமணியை இந்த கேரக்டருக்காக தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
பருத்தி வீரன் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற பிரியாமணி அதன்பின் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்தார். இருப்பினும் திருமணத்திற்குப் பின்னர் அவர் திரையுலகை விட்டு விலகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார். சசிகலா கேரக்டருக்கு ப்ரியாமணி பொருத்தமாக இருப்பாரா? என்பதை படம் வெளிவந்த பின்னர் தான் பார்க்க வேண்டும்