வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 ஜூன் 2019 (15:49 IST)

செந்தில் பாலாஜி மூலம் தூது – தங்க தமிழ்ச்செல்வனை இழுக்க திமுக புது ப்ளான் !

அமமுக வில்  நீக்கப்பட்டுள்ள  தங்க தமிழ்ச்செல்வனைத் தங்கள் கட்சிக்கு இழுக்க திமுக புதிதாகத் திட்டம் தீட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

தேர்தலுக்கு முன்பே தொடங்கிய தங்க தமிழ்செல்வன் - டிடிவி தினகரன் பனிப்போர் நேற்று முன் தினம் வெளியான ஆடியோ மூலம் வெளி உலகத்துக்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டது. அமமுகவில் அடிப்படை உறுப்பினர், தேனி மாவட்ட செயளாலர், அமமுக கொள்கை பரப்பு செயளாலர் என அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டு கட்சியை விட்டும் நீக்கப்பட்டுவிட்டார் தங்க தமிழ்ச்செல்வன். தேனி தொகுதியில் அமமுக அடைந்த தோல்விக்கானக் காரணம் குறித்து தங்க தமிழ்ச்செல்வன் தனியாக கூட்டம் போட்டதுதான் இருவருக்கும் இடையிலான விரிசலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அதிமுகவில் இணைவதற்காகத்தான் தினகரனுடன் முரண்பட்டுள்ளார் என்றும்  எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகிய அதிமுக அமைச்சர்கள்தான் அவரை இயக்கி வருகிறார்கள் என்றும் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து விரைவில் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைய இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின்.  ஆனால் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக வில் இணைவதை ஓபிஎஸ் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் திக்கு திசை தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த தங்கத்துக்கு திமுக செந்தில் பாலாஜி மூலம் தூதுவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி முதலில் அமமுக வில் இருந்து திமுக வில் இணைந்தபோது அவருக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மெண்டுகளில் முக்கியமானது தங்க தமிழ்ச்செல்வனை திமுகவுக்கு இழுப்பதுதான். அப்போது முடியாததை இப்போது முடித்து தலைமையிடம் நல்ல பேர் வாங்கும் முனைப்பில் இருக்கிறார் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது போல மாவட்ட செயலாளர் பதவி மற்றும் தேர்தலில் சீட் என வாய்ப்புகளை அள்ளி வழங்கவும் திமுக தயாராக உள்ளதாகத் தெரிகிறது. செந்தில் பாலாஜியை இழுத்து எப்படி கொங்கு மண்டலத்தில் தங்களை திமுக பலப்படுத்திக் கொண்டதோ அது போல தங்கத்தை இழுத்து தேனி மற்றும் மதுரைப் பகுதிகளில் காலூன்ற திமுக திட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது. ஆனால் தங்க தமிழ்ச்செல்வன் யாருக்கு ஓகே சொல்வார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.