மகனின் பெயர் சூட்டும் விழாவிற்கு சென்ற கணினி பொறியாளர் விபத்தில் பலி
ஈரோட்டில் கணினி பொறியாளர் ஒருவர், தனது மகன் பெயர் சூட்டும் விழாவிற்கு பொருள் வாங்க சென்ற போது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகார்த்திக் பிரபு (28). கணினி பொறியாளர். இவரது மனைவி சரண்யா (26). இவர்களுக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று கடந்த இரண்டு மாதம் முன்பாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு பெயர் சூட்டு விழா தை மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளை விஜயகார்த்திக் பிரபு குடும்பத்தார் ஏற்பாடு செய்து வந்தனர். விழாவுக்கான பொருட்கள் வாங்க பிரபு ஸ்கூட்டரில் கோபிக்கு சென்றுள்ளார். பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் எதிரில் வந்த சரக்கு ஆட்டோ விஜயகார்த்திக் பிரபு ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த பிரபு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனரை கைது செய்து கோபிச்செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.