1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 17 ஜூன் 2018 (16:07 IST)

18 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் - தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என தங்க தமிழ்ச்செல்வன் கோரிக்கை வைத்துள்ளார்.

 
8 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை கூறியுள்ளதால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு செல்லவுள்ளது.
 
இந்த நிலையில் சபாநாயகரின் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தங்க தமிழ்ச்செல்வன் முடிவு செய்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியபோது, என்னுடைய தொகுதியில் கடந்த 9 மாதங்களாக எம்.எல்.ஏ. இல்லை. இதனால் மக்கள் அடிப்படை பிரச்சனைகளை கேட்டு நிவர்த்தி செய்ய முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டு வருகிறார்கள். எங்கள் வழக்கில் 3வது நீதிபதி விசாரணை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எப்படியும் அந்த தீர்ப்பு வெளிவருவதற்கு ஓராண்டு காலம் ஆகலாம்.
 
என்னுடைய தொகுதிக்கு எம்.எல்.ஏ. வேண்டும். எனவே சென்னை ஐகோர்ட்டில் நான் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறுகிறேன். அதன்பிறகு, என்னுடைய தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து ஒரு நிரந்தரமான எம்.எல்.ஏ. வரட்டும். பொதுமக்களும் பயன் அடையட்டும். அதற்காகத்தான் நான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்' என ஏற்கனவே அவர் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தங்க தமிழ்ச்செல்வன் “தவறான வழிகாட்டுதலால் நாங்கள் தனித்து விடப்பட்டிருக்கிறோம். நாங்களும் சட்டசபைக்கு சென்றிருக்க வேண்டும்.  தனித்தனியாக முடிவெடுத்துக்கொள்ளுங்கள் என டிடிவி தினகரன் கூறிவிட்டார். எடப்பாடி பழனிச்சாமி அணியில் ஒருபோதும் இணைய மாட்டேன். 3வது நீதிபதியின் தீர்ப்பு நியாயமாக அமையும் என நான் நம்பவில்லை. நீதிமன்றங்களும் கேலிக்கூத்தாகிவிட்டது. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 18 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்து அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் வருவதற்கு வழி வகுக்க வேண்டும்” என அவர் கூறினார்.