திமுகவினரின் செல்போன் ஒட்டுக்கேட்பு..! தேர்தல் ஆணையத்தில் புகார்...!!
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், திமுக வேட்பாளர்கள், முன்னணி அரசியல் தலைவர்களின் செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்கப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் கடிதம் எழுதி உள்ளார்.
அதில், தமிழகத்தில் உள்ள முன்னணி அரசியல் கட்சி தலைவர்களின் செல்போன் உரையாடல்களும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் செல்போன் உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. இது மத்திய அரசு கொண்டுள்ள சட்டத்தின் விதியை மீறிய செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட சுதந்திரத்தை கெடுக்கும் வகையில், யாருடையை செல்போன் உரையாடல்களையும் ஒட்டுல் கேட்கக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு உள்ளது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று உச்ச நீதிமன்ற உத்தரவுகளும் உள்ளன. இதை எல்லாவற்றையும் மீறி சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் முகமைகள் சட்டவிரோத மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்டு வருகின்றன. இதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுதந்திரமான முறையில் மக்களவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தி உள்ளார்.