தமிழர் குரல்: முஸ்லிம் கிருஸ்துவர் பிரதமராக முடியாது; 100% வாக்குப்பதிவு சாத்தியம் இல்லை!!

Last Updated: வெள்ளி, 22 மார்ச் 2019 (21:28 IST)
வரவிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி பிபிசி தமிழ் சார்பில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் "தமிழர் குரல்" என்ற பெயரில் தேர்தல் சிறப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.
 
சென்னையில் இன்று ஜிஆர்டி கன்வென்ஷன் சென்டரில் இந்த நிகழ்ச்சி 'தமிழர் குரல்' என்ற பெயரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், முன்னாள் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் டி,எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். 
 
இந்தத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்தத் தேர்தலில் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள், ஜனநாயகம் குறித்த அவர்களுடைய கருத்து என்ன என்பவற்றை புரிந்துக்கொள்வதே இந்த நிக்ழ்ச்சியின் நோக்கமாக இருந்தது. 
இந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசியது பின்வருமாறு, இந்திய தேர்தல் களத்தில் கூட்டணி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. வாக்கு வங்கிகளை அடிப்படையாக கொண்டுதான் கூட்டணி அமைக்கப்படுகிறது.
 
தமிழகத்தை பொறுத்தவரை 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சிகளும், இந்திய அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் பிரதான கட்சிகளாக இருக்கின்றன. அதனால், இதில் ஏதேனும் ஒரு கட்சியுடன்தான் விசிக போன்ற வளரும் கட்சிகள் சேர முடியும்.
கூட்டணி என்று வரும்போது, சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், முற்றிலும் கொள்கை மாறுபட்டிருக்கும் கட்சிகளோடு கூட்டணி வைக்க முடியாது. உதாரணமாக நாங்கள் பாஜகவுடன் சேர முடியாது.
 
முஸ்லிம் அமைப்பால் மதவாதம் பேச முடியாது. என்னதான் நினைத்தாலும் இந்தியாவில் ஒரு முஸ்லிம் அல்லது கிறித்துவர் கட்சி தொடங்கி பிரதமராக முடியாது. அது இங்கு நிச்சயம் சாத்தியமேயில்லை. நாங்கள் முஸ்லிம் கட்சிகளோடு கூட்டணி வைத்திருப்பது, சிறுபான்மையினருக்கு ஆதரவான செயல்பாடு. அது இந்து மதத்துக்கு எதிரானது அல்ல என தெரிவித்தார். 
இதனை தொடர்ந்து, டி,எஸ்.கிருஷ்ணமூர்த்தி மாணவர்களின் கேள்விக்கு பின்வருமாறு பதில் அளித்தார், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்தியாவின் பெருமை. இதனால், காகிதங்கள் வீணாகாது. நேர விரையத்தை இது குறைப்பதோடு, இதனால் விரைவாக முடிவுகளை அறிவிக்க முடியும்.
 
ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்றால், இந்தியாவில் அரசியல் கட்சிகளை முறைப்படுத்த தனியே சட்டம் கொண்டுவர வேண்டும். மேலும், தேர்தகளுக்கான நிதி என்று ஒன்று அமைக்கப்பட வேண்டும். உலகத்தில் எங்கேயுமே நூறு சதவீத வாக்குப்பதிவு என்பது சாத்தியம் இல்லாதது. அதற்கு கட்டாயம் வாக்குப்பதிவை கொண்டுவந்தால்தான் உண்டு என பதிலளித்தார். 


இதில் மேலும் படிக்கவும் :