சலூன் கடைகளைத் திறக்க அனுமதி வேண்டும் – தொழிலாளர்கள் சார்பாக திருமா வளவன் கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மூடப்பட்ட சலூன் கடைகளை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அதன் பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள் திறக்கப்பட்டாலும், சலூன் கடைகளுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அந்த தொழிலை நம்பி இருக்கும் 5 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சலூன் கடைகளுக்கான வழிமுறைகளை வெளியிட்டு அவற்றைத் திறக்க அரசு உத்தரவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது அறிக்கையில் ‘தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் முடி திருத்தும் நிலையங்கள் உள்ளன. அதில் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஈட்டும் வருமானத்தை வைத்தே இவர்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தனர். ஊரடங்கால் தற்போது நீண்ட காலமாகத் தொழில் செய்ய முடியாததால் இவர்கள் எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முடி திருத்துவோர் நலவாரியத்தில் தமிழ்நாடு முழுவதும் 17,300 பேர் மட்டுமே பதிவு செய்துகொண்டுள்ளனர் என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 2,000 ரூபாய் நிவாரணம்கூட அதில் சில ஆயிரம் உறுப்பினர்களுக்கு மட்டும்தான் கிடைத்திருக்கிறது. மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை நிவாரணம் வேண்டாம், தொழில் செய்ய அனுமதித்தாலே போதும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. இந்தக் கடைகளால் மட்டும்தான் நோய்த் தொற்று பரவும் என்று தமிழக அரசு நினைப்பது வேடிக்கையாக உள்ளது. நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு என்ன விதமான நிபந்தனைகளை விதிப்பது என்பதை ஆலோசித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி, முடி திருத்தும் நிலையங்களையும் திறப்பதற்குத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் ‘ எனக் கூறியுள்ளார்.