வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 15 மே 2020 (14:27 IST)

இன்னும் ரெண்டே நாள் தான்... போக்குவரத்து குறித்து அதிகாரி வைக்கும் சஸ்பென்ஸ்!

இன்னும் இரண்டு நாட்களில் போக்குவரத்து சேவை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கினால் பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து வசதிகளும் தடை செய்யப்பட்டது. மூன்று கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 
நான்காம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அதிகபடுத்தப்படும் என்பதால் போக்குவரத்துகள் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்திற்குள் பேருந்துகளை இயக்குவது குறித்து தமிழக போக்குவரத்து கழகம் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்கள் கொரோனா இல்லாத பச்சை மண்டலங்களாக மாறியுள்ளன. இந்த பகுதிகளில் குறைந்த அளவிலாக உள்ளூர் பேருந்து சேவைகளை இயக்கவும், ஆரஞ்சு மண்டலங்களில் விதிமுறைகளுடன் குறைவான அளவில் பேருந்துகளை இயக்கவும், சிவப்பு மண்டலங்களில் பாதிப்பு குறையும் வரை முற்றிலும் பேருந்து சேவைகளை இயக்காமல் இருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
அதிலும், இன்னும் 2 நாட்களில் மாவட்ட அளவில் பேருந்துகளை இயக்க வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதாவது, கோவை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனோ இல்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே இந்த மாவட்டங்களுக்கு விரைவில் குறைந்த அளவிலான போக்குவரத்து சேவையை தொடங்க ஆலோசித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக நம்பிக்கை  தெரிவித்துள்ளார். 
 
ஆனால் சென்னை போன்ற நகரங்களுக்கு பேருந்து சேவை முற்றிலும் பொதுமக்களுக்கு இருக்காது அதற்கான ஏற்பாடுகள் காலதாமதம் ஆகும் என்றும் தகவல் வெளியிட்டுள்ளார்.