1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 மே 2020 (08:35 IST)

உஷார்! ஆன்லைனில் மது விற்பதாக மோசடி! – டாஸ்மாக் விளக்கம்!

ஆன்லைனில் மது விற்பதாக சமூக வலைதளங்களில் உலா வரும் லிங்க் போலியானது என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி திறக்கப்பட்ட மதுக்கடைகள் நீதிமன்ற உத்தரவால் மீண்டும் மூடப்பட்டது. அதை தொடர்ந்து ஆன்லைன் மூலம் மது விற்கும் நடைமுறையை செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆன்லைனில் மது வாங்கலாம் என லிங்க் ஒன்று வேகமாக பரவி வருவதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்து டாஸ்மாக் நிர்வாகம் தாங்கள் எந்த ஆன்லைன் விற்பனையையும் தொடங்கவில்லை என்றும், போலி லிங்குகளை நம்பி அதில் ஆர்டர் செய்து ஏமாற வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள சைபர் க்ரைம் போலீஸார் அந்த போலி லிங்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.