1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (13:02 IST)

நாளை மறுநாள் +2 பொதுத்தேர்வு! – துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் பள்ளி பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் வினாத்தாள் அறைகளுக்கு கடும் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வு நாளை மறுநாள் முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு பணிகள் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் தேர்வு சமயத்தில் மின்வெட்டு எழாதவாறு நடவடிக்கைகள் எடுக்க மின்சாரவாரியம் மின்கோட்ட அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அளித்துள்ளது.

முன்னதாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடந்தபோது வினாத்தாள்கள் வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் வினாத்தாள்கள் வெளியாகாமல் இருக்க கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Police

நாளை மறுநாள் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் வினாத்தாள்கள் சென்னையிலிருந்து பத்திரமாக தனித்தனி வாகனங்களில் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தேர்வுத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு உள்ளது. தேவையில்லாமல் வினாத்தாள் அறை அருகே செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக வினாத்தாள் அறைக்குள் செல்லும் அலுவலர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் அறையின் உட்புறமும், வெளிப்புறமும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.