1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2020 (09:22 IST)

காவிரி மேலாண்மை வாரியத்தில் எந்த மாற்றமும் இல்லை! – தமிழக அரசு விளக்கம்!

காவிரி மேலாண்மை வாரியத்தை ஜல் சக்தி துறையின் கீழ் கொண்டுவந்துள்ளதற்கு அரசியல் கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசு மற்றும் மக்களின் இடைவிடாத கோரிக்கையின் பேரில் காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வராத சுதந்திர அமைப்பான இது காவிரி படுகை மாநிலங்களை கட்டுப்படுத்தவும், நதிநீரை மாநிலங்கள் பங்கிட்டு கொள்ளவும் வழி வகுக்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி நீர் மேலாண்மை வாரியம் கொண்டு வரப்பட்டதாக வெளியான செய்தியை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் பல இதற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக அரசு ”மத்திய அரசின் நீர்வள ஆதாரம், நதிநீர் மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் ஆகிய இரண்டையும் இணைத்து புதிதாக ஜல்சக்தி துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது.

தற்போது இந்த அமைச்சகத்தின் கீழ் கோதாவரி மற்றும் கிருஷ்ணா வாரியமும் மற்றும் காவிரி நீர் மேலாண்மை வாரியமும் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இது முற்றிலும் நிர்வாகம் சார்ந்த நடவடிக்கையே தவிர, இதனால் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் அதிகாரங்கள் மற்றும் உரிமைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.