வறுமையை ஒழிக்க வக்கில்லாதவர் மோடி: காங்கிரஸ் விமர்சனம்!
அமெரிக்க அதிபரின் இந்திய வருகையையொட்டி அகமதாபாத் குடிசை பகுதிகளை மறைக்கும் வகையில் சுவர் எழுப்பியுள்ளதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று அகமதாபாத் வந்தடைந்தார். அவரை வரவேற்பதற்காக அகமதாபாத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் ‘நமஸ்தே ட்ரம்ப்’ என்னும் வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் ட்ரம்ப் கலந்து கொள்ள இருக்கிறார்.
ட்ரம்ப் பயணிக்க இருக்கும் பகுதிகளில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் உள்ள குடிசைகளை மறைக்கும் விதமாக ஏழு அடி உயரத்திற்கு சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த சுவர் எழுப்பிய விவகாரம் குறித்து கண்டனங்களை தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ” 3 முறை குஜராத் முதல்வர், 6 ஆண்டுகள் இந்திய பிரதமராக இருந்தும் குஜராத் மாநிலத்தில் வறுமையை ஒழிக்க வக்கில்லாமல், அமெரிக்க அதிபர் வரும்போது வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் ஏழை மக்களின் குடிசைகளை மறைத்து போலியான வளர்ச்சியை காட்ட சுவர் எழுப்பியிருக்கிறார் மோடி.” என்று பதிவிட்டுள்ளது.