அமைச்சர் எல் முருகன் வீட்டில் தமிழ்ப்புத்தாண்டு விழா: பிரதமர் கலந்து கொள்வதாக அறிவிப்பு..!
மத்திய அமைச்சர் எல் முருகன் வீட்டில் தமிழ்ப்புத்தாண்டு விழா கொண்டாட இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக தமிழில் ட்விட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
இன்னும் சற்று நேரத்தில், இரவு சுமார் 8.15 மணியளவில், எனது அமைச்சரவை சகாவான திரு எல் முருகன் இல்லத்தில் நடைபெறவுள்ள தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டத்தில் நான் பங்கேற்கவிருக்கிறேன். தமிழ்க் கலாச்சாரத்தைப் போற்றுவோர்களில் ஒருவராக நான் இந்த விழாவை பேராவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்
அதேபோல் இந்த நிகழ்ச்சி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு எல் முருகன் அவர்களின் இல்லத்தில் இன்று, தமிழ்ப் புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. முதன்முறையாக மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்பது தமிழ் மக்கள் அனைவருக்குமே மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
புதியதோர் தொடக்கமான தமிழ்ப் புத்தாண்டினை சிறப்பாக முன்னெடுக்கும் மத்திய இணையமைச்சர் அவர்களுக்கும், கலந்து கொண்டு பெருமை சேர்க்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும், தமிழக பாஜக சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Edited by Siva