பொங்கல் தினத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய தவெக தலைவர் விஜய்.. பெரும் சர்ச்சை..!
இன்று பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு தமிழ் புத்தாண்டு வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்று பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தை ஒன்றாம் தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக விஜய் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விஜய் கூறியிருப்பதாவது:
பொங்கல் திருநாள்!
உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.
2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!
இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்.
அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Edited by Siva