8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?
தமிழகத்தை போல் நீட் தேர்வு ரத்து செய்ய கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதை பரிசீலிக்கக் வேண்டுமென்று 8 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதே போல் டெல்லி, இமாச்சலம், ஜார்க்கண்ட், தெலங்கானா, கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் கர்நாடகா மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வு குளறுபடிகள் அதன் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அத்தேர்வை எழுதிய பல்லாயிரக்கணக்கானோரின் கனவுகளை சிதறடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வை எதிர்கொள்ளத் தேவையான மிக அதிக பயிற்சிக் கட்டணத்தை செலுத்த முடியாததால் ஏழை எளிய குடும்பத்தினருக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பு மறுக்கப்படுவதாலேயே நீட்டை எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் பிரதமருக்கு தாம் எழுதிய கடிதத்தை பற்றியும் விளக்கியுள்ளார்.
மேலும், இப்பிரச்சனையின் முக்கியத்துவத்தைக் கருதியும், மாணவர்களின் நலனைக் கருதியும் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்த அம்மாநில சட்டமன்றங்களிலும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.