திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 மார்ச் 2021 (13:21 IST)

கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்போம்... டி.ஆர். நிலைபாடு இதுதான்!

எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர். 

 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி என பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் லட்சிய திமுக யாருக்கும் ஆதரவில்லை என அக்கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
ஜெயலலிதா இல்லாமல் அதிமுக சந்திக்கின்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் களம். அதைப்போல் மறைந்த முதல்வர் கருணாநிதி இல்லாமல் திமுக சந்திக்கின்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் களம். இரண்டு கட்சிகளுக்குமே இருக்கிறது அவரவர் பலம். இதைத் தவிர கூட்டணியென்று சேர்த்திருக்கிறார்கள் பக்க பலம். 
 
அதைத்தவிர அவர்களிடத்தில் இருக்கிறது பல பலம். இரண்டு கட்சிகளுமே பார்த்துக் கொள்ளப்போகிறது பலப்பரீட்சை. இதில் நான் போய் என்ன செய்யப் போகிறேன். கொள்கையைச் சொல்லி ஓட்டு கேட்டதெல்லாம் அந்தக் காலம். கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ஓட்டு வாங்கிக் கொள்ளலாம் என்பது இந்தக் காலம். காலமும் சரியில்லை. களமும் சரியில்லை. கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன் என குறிப்பிட்டு எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.