செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (13:52 IST)

கவர்னர் மாளிகையில் நடந்தது என்ன?? – ஸ்டாலினுடன் சென்ற டி.ஆர்.பாலு விளக்கம்

திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்ததும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கை விட்டது குறித்து உடன் சென்ற எம்.பி டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தி மொழியால்தான் நாட்டை ஒருங்கிணைக்க முடியும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து மாநில அளவில் மாபெரும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் திமுக தலைமை அறிவித்தது.

இந்நிலையில் ஸ்டாலினை சந்திக்க வேண்டுமென கவர்னர் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆளுனரை சந்தித்து திரும்பிய ஸ்டாலின் போராட்டத்தை வாபஸ் பெற்றார். இதனால் ஆளுனர் ஸ்டாலினை மிரட்டியிருக்கலாம் என வதந்தி செய்திகள் வெளிவரத் தொடங்கின.

இந்நிலையில் ஆளுனர் மாளிகையில் நடந்தது குறித்து திமுக முக்கிய உறுப்பினரும், எம்.பியுமான டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் “அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த இருந்த சூழலில் ஆளுனர் ஸ்டாலினை அழைத்திருந்தார். உடன் நானும் சென்றிருந்தேன்.

எங்களை வரவேற்ற ஆளுனர் அமித்ஷாவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் அதுகுறித்த மத்திய செய்தி துறையின் பிரத்யேக அறிக்கை ஒன்றையும் எங்களுக்கு படிக்க கொடுத்தார்.

அதை சுட்டிக்காட்டி பேசிய கவர்னர் திமுக தலைவர்கள் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றாரே தவிர போராட்டத்தை கவிடும்படி அவர் எங்களை வற்புறுத்தவில்லை.
ஆனாலும் ஸ்டாலின் போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருந்தார். நாங்கள் கவர்னரிடம் விடைபெற்று வெளியேறிய பிறகுதான், அமித்ஷா தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

அவர் விளக்கம் அளித்தபிறகு போராட்டத்தை தொடர்வது மரியாதைக்குரிய செயல் அல்ல என்பதாலேயே திமுக போராட்டத்தை கைவிட்டது.

ஆனால் இதை பலர் எங்களை மிரட்டி போராட்டத்தை கைவிட சொன்னதாக திரித்து கூறுகிறார்கள். இது போன்ற அபத்தங்களை திமுக எப்போதும் கண்டுகொள்வதில்லை” என்று கூறியுள்ளார்.