புதன், 18 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2015 (02:21 IST)

மீத்தேன் வாயு எடுக்க தமிழக அரசு தடை: தி.வேல்முருகன் வரவேற்பு

மீத்தேன் வாயு எடுக்க தமிழக அரசு தடை: தி.வேல்முருகன் வரவேற்பு
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்க, தமிழக அரசு விதித்த தடைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தின் நெற்களஞ்சியம் காவிரி டெல்டா பகுதி. இந்த பகுதிகளில் கர்நாடகாவின் வஞ்சகம் காரணமாக பயிர்சாகுபடி கேள்விக்குறியாகிப் போனது. இதற்கு உடனடி தீர்வு காண மத்திய அரசு முன்வரவில்லை.
 
இந்த நிலையில், காவிரி டெல்டாவையே பாலைவனமாக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டது. அதாவது காவிரியில் மீத்தேன் எரிவாயு எடுக்கப் போகிறோம். பாறை எரிவாயு எடுக்கப்போகிறோம் என்று விவசாய விளைநிலங்களை கபளீகரம் செய்ய ராட்சத இயந்திரங்களை களமிறக்கியது. இதை கட்சி, ஜாதி பாகுபாடு இன்றி மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் அனைவரும் எதிர்து பெரும் போராட்டம் நடத்தினர்.
 
விவசாயிகளின் இந்த பெரும் போராட்டம் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013ஆம் ஆண்டு மீத்தேன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய ஒரு ஆய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டார்.
 
மேலும், காவிரி டெல்டா பகுதியில் சுமார் 691 கி.மீ. பரப்பில், கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் செயல்படுத்த உள்ள மீத்தேன் திட்டத்துக்கு, தமிழக அரசு அனுமதியும் வழங்காது என்றும், இந்த திட்டதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பது காவிரி டெல்டா விவசாயிகளை நிம்மதிப் பெருமூச்சுவிட செய்துள்ளது.
 
ஏற்கெனவே, விளைநிலங்கள் வழியே கெயில் நிறுவனமானது எரிவாயு குழாய்களை பதிக்க முயற்சித்த போது தமிழக அரசு திடமுடன் அத்திட்டத்தை செயல்படுத்த தடை விதித்து தமிழகத்தை காப்பாற்றியது.
 
தற்போது, அதே போன்று, மீத்தேன் எரிவாயு திட்டத்துக்கு தடை விதித்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துள்ளது.
 
முதல்வர் ஜெயலலிதாவின் உறுதியான இந்த நடவடிக்கைக்கு தமிழக விவசாயிகள் சார்பிலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை  தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.