துரைமுருகனுக்கு போன் போட்டு பல்ப் வாங்கிய சுதீஷ்!
கூட்டணி விவகாரத்தில் தேமுதிக முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது. ஏற்கனவே திமுக கதவை சாத்திவிட்டநிலையில் இப்போது அதிமுக மட்டுமே கூட்டணி வாய்ப்பாக உள்ளது. இல்லாவிட்டால் தனித்துதான் போட்டியிட வேண்டும் என்ற நிலை உள்ளது.
இந்நிலையில் தேமுதிக தங்களுக்கு குறைந்த பட்சம் 7 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அடம்பிடித்து வருகிறது. ஆனால் 4 தொகுதிக்கு மேல் ஒதுக்க முடியாது என அதிமுக மறுத்துவருகிறது.
இதற்கிடையில் திமுக பொருளாளர் துரைமுருகனிடம் போனில் பேசிய சுதீஷ் கூட்டணிக்கு தூதுவிட்டுள்ளார். ஆனால் திமுக அணியில் இடம் இல்லை என்று துரைமுருகன் தெரிவித்துவிட்டார். இந்த தகவலை துரைமுருகன் செய்தியாளர்களிடமும் தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் தேமுதிகவின் சுதீஷ் இன்று பாஜக மூத்த தலைவர் பியூஸ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதிலும் முடிவு எட்டப்படவில்லை. அப்போது பேசிய சுதீஷ், தேமுதிகவின் பலத்தை பொறுத்து இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளோம். நாளை அல்லது நாளை மறுநாள் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
தற்போது அதிமுகவுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையை தேமுதிக நடத்தி வருகிறது. இறுதி முடிவு எடுப்பதில் தடுமாறுவதால், சமூக வலைதளங்களில் தேமுதிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.