சென்னை அண்ணா சாலையில் மீண்டும் பள்ளம்: போக்குவரத்து மாற்றம்
சென்னை அண்ணாசாலையில் பள்ளம் தோன்றுவது அவ்வப்போது நிகழும் நிகழ்வாக இருப்பது சென்னைவாசிகள் தெரிந்ததே. கடந்த மார்ச் மாதம் அண்ணாசாலையில் சர்ச் பார்க் அருகே திடீரென பள்ளம் தோன்றி அதில் அரசு பேருந்து ஒன்று மாட்டிய நிகழ்வை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
இந்த நிலையில் சென்னையின் பிசியான பகுதிகளில் ஒன்றாகிய அண்ணா சாலை டி.எம்.எஸ் பேருந்து நிறுத்தம் அருகில் திடீரென இன்று இரவு 7 மணிக்கு பள்ளம் ஒன்று தோன்றியுள்ளது. இந்த பள்ளம் எதனால் ஏற்பட்டது என்று இதுவரை தெரியவில்லை என்பதால் இந்த பள்ளத்தை மூடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தேனாம்பேட்டையில் இருந்து பிராட்வே செல்லும் வாகனங்கள் தி.நகர் விஜயராகவா சாலை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன. பிராட்வேயில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகன்ங்கள் மட்டும் ஒருவழி பாதையாக அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் பள்ளத்தால் அண்ணா சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.