செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 நவம்பர் 2024 (11:36 IST)

திருச்செந்தூரில் ராட்சத அலை.. கடலில் குளித்த 2 பெண்களுக்கு கால் முறிவு..!

Tiruchendur
திருச்செந்தூர் கடலில் திடீரென தோன்றிய ராட்சத அலை காரணமாக கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களின் கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர் என்பதும், அவர்கள் கடலில் குளித்துவிட்டு அதன் பிறகு முருகனை தரிசிக்க செல்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று அதிகாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், வழக்கம்போல் பக்தர்கள் கடலில் புனித நீராடினர். அப்போது திடீரென ராட்சத அலை எழுந்ததில், இரண்டு பெண்கள் கீழே விழுந்ததால் கால் முறிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஒருவர் காரைக்குடியைச் சேர்ந்த 50 வயது சிவகாமி, மற்றவர் சென்னையைச் சேர்ந்த 40 வயது கீர்த்தனா என்று தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, இரண்டு பேரையும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் உடல்நிலை தேறி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

கடலில் ராட்சத அலை எழும்போது பக்தர்கள் மிகவும் கவனத்துடன் குளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Edited by Siva