செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 டிசம்பர் 2020 (16:16 IST)

ஜனவரியில் எண்ட்ரி கொடுக்கும் சசிகலா, ரஜினிகாந்த்! – சுப்பிரமணிய சுவாமி சொன்ன சூசகம்!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து அறிவித்துள்ள நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் ரஜினிக்கும், சசிக்கலாவுக்கும் கடும் போட்டி இருக்கும் என சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆதங்கத்துடன் காத்திருந்த நிலையில் பல ஆண்டு மௌனத்தை கலைந்து கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த். இதை அவரது தொண்டர்கள் பல இடங்களில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டி இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தின் இந்த முடிவிற்கு சினிமா துறையினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

எதிர்வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜனவரி மாதம் முதல் நாள் தனது கட்சியை தொடங்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கட்சி சின்னம், கொடி போன்ற இன்னபிற முன் தயாரிப்பு பணிகளில் நிர்வாகிகள் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிகிறது. அதே ஜனவரியில் அமமுகவினரால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சசிகலா விடுதலை நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி “தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்துக்கும், அமமுக சசிகலாவுக்கும் தான் கடுமையான போட்டி நடக்கும். இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக குழப்பமான சூழலுக்கு தள்ளப்படும்” என கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் கூட்டணி அமைப்பாரா தனியாக நின்று போட்டியிடுவாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.