ஆர்.கே.நகரில் மாணவர்கள் திடீர் போராட்டம். அதிர்ச்சியில் காவல்துறை
இம்மாதம் 12ஆம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த தொகுதி முழுவதிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு அசம்பாவிதம் ஏதும் நடைபெறாதவாறு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி காவல் நிலையம் அருகே திடீரென மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் பாதுகாப்பையும் மீறி அந்த பகுதியில் மாணவர்கள் எப்படி கூடினார்கள் என்பது காவல்துறையினர்களுக்கே புரியாத புதிராக உள்ளது.
டெல்லியில் கடந்த 20 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருவதாகவும், விவசாயிகளுக்கு நியாயம், நீதி கிடைக்காவிட்டால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அவர்கள் கோஷமிட்டனர்.
இதனை சற்றும் எதிர்பாராத காவல்துறை அதிகாரிகள், அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக் கூடாது என்று எச்சரித்து மாணவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.