நீட் எதிர்ப்பு மாணவி அனிதா தற்கொலை: தற்கொலைக்கு தூண்டிய உங்களுக்கு என்ன தண்டனை?
நீட் எதிர்ப்பு மாணவி அனிதா தற்கொலை: தற்கொலைக்கு தூண்டிய உங்களுக்கு என்ன தண்டனை?
மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களை நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்புக்கு இடம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தால் தமிழகத்தை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களை மத்திய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுத வைப்பது எந்த வகையில் ஜனநாயகம். இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. தமிழகத்தில் ஒட்டுமொத்த மாணவ சமுதாயங்களும் இதனை எதிர்த்தது. அனைத்து கட்சிகளும் இதனை எதிர்த்தது.
ஆனால் இது எதையுமே அரசு கண்டுகொள்ளவில்லை. மாநில அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதையுமே எடுக்கவில்லை. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்க கூடிய உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு உதவாமல் கைவிரித்துவிட்டது.
தன்னுடைய மருத்துவ கனவுக்கு முடிவுரை எழுதிய மத்திய மாநில அரசுகளின் துரோகத்தால் நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய ஏழை மாணவி அனிதா தனது உயிரை மாய்த்துள்ளார்.
மாணவி அனிதா அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த கூலித்தொழிலாளியான சண்முகத்தின் மகள். தனது குடும்ப வறுமையையும் வென்று 12-ஆம் வகுப்பு தேர்வில் மாணவி அனிதா 1176 மதிப்பெண்கள் எடுத்தார். மருத்துவ படிப்புக்கு இவரது கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.7 ஆகும். ஆனால் நீட் தேர்வுக்கு தனியாக கோச்சிங் செல்ல முடியாத பொருளாதார நிலைமையில் உள்ள மாணவி அனிதாவால் நீட் தேர்வின் மூலம் 700-க்கு 86 கட் ஆஃப் மதிப்பெண்களை மட்டுமே பெற முடிந்தது.
மாணவி அனிதாவின் மருத்துவப்படிப்பு கனவுக்கு பெரும் இடியாக அமைந்தது இந்த நீட் தேர்வு. இந்த நீட் தேர்வை எதிர்த்து மாணவி அனிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என சில மாணவர்கள் அளித்த மனுவை உடனையாக அவசர மனுவாக கருத்தி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் முறையிட்டார். இதில் மாணவி அனிதா எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டார்.
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றால் தனது மருத்துவராகும் கனவு பறிபோய்விடும் என தனது மனுமூலம் உச்ச நீதிமன்றத்தில் கதறினார் மாணவி அனிதா. ஆனால் நீட் தேர்வின் அடிப்பைடையிலேயே மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது. இதனால் மனமுடைந்த மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் மாணவி அனிதாவின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்திற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளே என அனிதாவின் குடும்பத்தினர், அரசியல் கட்சியினர் உள்பட பலரும் குற்றம் சாட்டுகின்றனர். ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் கனவை சிதைத்து அவர்களை தற்கொலைக்கு தூண்டியது யார்? அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகிறது. அவர்களுக்கு தண்டனை கிடைக்கப்போவதில்லை என்பதே நிதிர்சனம்.
ஆட்சியாளர்கள் இந்த மரணத்திற்கு தார்மீக பொறுப்பு ஏற்கவேண்டும். எத்தனை கோடிகளை மாணவியின் குடும்பத்துக்கு வாரி வழங்கினாலும் அரசினால் இறந்து போன மாணவி அனிதாவை திரும்ப கொண்டு வர முடியாது. இது போன்ற பல அனிதாக்கள் தங்கள் மருத்துவர் ஆகும் கனவை தொலைத்துவிட்டு மனதுக்குள் விம்மிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காவது தங்கள் கனவை சாத்தியமாக்கும் சூழலை உருவாக்குவது தான் மாணவி அனிதாவின் மரணத்துக்கு அரசு செய்யும் குறைந்தபட்ச இழப்பீடாக இருக்கும்.