கர்நாடக மாநில வனத்துறைக்கு வன்மையான கண்டனம்-டிடிவி. தினகரன்
மேட்டூரை சேர்ந்த மீனவர் ராஜா கர்நாடக வனத்துறையினர் சுட்டதால் காலமானார். இந்த சம்பவத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அடிப்பாலாறு பகுதியில் கடந்த 14ஆம் தேதி இரவு தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது அவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ராஜா என்ற மீனவர் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
இந்த துயரச் சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பின்னரும் இது குறித்து கர்நாடக வனத்துறைக்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்காதது மீனவர் சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜா உயிரிழக்கக் காரணமான கர்நாடக மாநில வனத்துறைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன், உயிரிழந்த மீனவருக்கு இருமாநில அரசுகளும் நிதி உதவி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.